Sunday 22 September 2013

வண்ணார் மடம்

எல்லா புராணங்களும் தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்களால் சொல்லப்பட்டவையே. புராணங்களைத் தொகுத்தவரும், மஹாபாரதத்தைத் தந்தவருமான வியாசரும் தவ வாழ்க்கையை மேற்கொண்டவர்தான். ராமன் வாழ்ந்த சமகாலத்திலேயே வாழ்ந்து ராமாயணம் இயற்றிய வால்மீகியும் தவ வாழ்க்கையை ஏற்றவர்தான். இத்தகையவர்களது வழிகாட்டுதல்களின் மூலமாகத்தான் தெய்வங்களைப் பற்றிய அறிவும், அவற்றை வழிபடும் முறைகளும் ஏற்பட்டனடவே தவிர ஆராய்ச்சியாளர்கள் சொல்வது போல, கற்கால மனிதனது அறிவு வளர்ச்சியில் கருத்துக்களை உண்டாக்கி, உருட்டிப்போட்டு, உருவாக்கவில்லை.

பாரதம் முழுவதும் இருந்த மக்கள் ஆங்காங்கே தத்தமக்கென்று ஒரு ஆன்மீகப் பிடிப்பைக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் துணி வெளுக்கும் வண்ணார் மக்களைப் பற்றிய ஒரு செப்புப் பட்டயம் சிதம்பரத்தில் கிடைத்தது. (கல்வெட்டு காலாண்டிதழ் – 82, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை) அதன் மூலம் சில அரிய செய்திகள் கிடைத்துள்ளன, இன்று நாம் மொழிரீதியாக மக்கள் இனம் பிரிந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தச் செப்புப் பட்டயம் எழுதப்பட்ட 17 நூற்றாண்டு வரையில், மக்கள் மொழி ரீதியாகத் தங்களை ஒரே இனம் என்று காணவில்லை, பிரிக்கவும் இல்லை. வண்ணார்கள் பாரதம் முழுவதும் இருந்தனர். ஒவ்வொரு இடத்திலும் இருந்தவர்கள், அந்தந்த இடங்களில் புழங்கிய மொழியைப் பேசியிருக்கின்றனர். வேறு வேறு மொழிகளைப் பேசிய வண்ணார்கள் தாங்கள் ஒரே இனம் அல்லது சாதி என்று கருதினார்கள். அவர்கள் தொழில், அந்த்த் தொழில் கொடுத்த வாழ்க்கை முறை அவர்களை ஒரே சாதியாக இனம் கண்டு கொள்ளப் பயன்பட்ட்து.

இதனால் ஒரு வண்ணார் இன்னொரு வண்ணாரைப் பார்த்தால், அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை ஏற்பட்டுவிடுகிறது. வட இந்தியாவிலிருந்து வந்த வண்ணாருக்குத் தென் இந்திய வண்ணாரிடம் ஒரு பற்றும், ஓரினம் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. இது போலவே அந்தந்த தொழில் செய்தவர்களுக்கு, அதே தொழிலைச் செய்தவர்களிடம் ஒரே இனம் என்ற எண்ணம் ஏற்பட்டிருகிறது.



இந்தச் செப்புப் பட்டயத்தின் மூலம், விஜய நகரப் பேரரசர், சிதம்பரத்துக்கு வருகை தந்த விவரம் தெரிகிறது, அப்பொழுது அவரது துணிகளைத் துவைக்கும் வண்ணாரும் கூடவே வந்துள்ளார். வந்த இடத்தில், மற்ற வண்ணார்களைச் சந்திக்கிறார். வண்ணார் மடம் இருந்த இடத்தைத் தேடிப் போய்ப் பார்க்கிறார். வண்ணார்களுக்கென்று மடம் இருந்திருக்கிறது,, மடத்தலைவர் இருந்திருக்கிறார். வண்ணார் திருமணங்களை மடத்தலைவர் செய்து வைத்திருக்கிறார். திருமணத்தின் போது, இரு வீட்டாரும் மடத்தின் செலவுக்காக ஒரு காசு கொடுக்க வேண்டும் என்ற முறை இருந்திருக்கிறது.

அரசரது வண்ணார், வந்தபோது, சிதம்பரத்தில் இருந்த அந்த மடம் சரிவர இயங்கவில்லை. அதில் இருந்த குறைபாடுகளை, அவர் மன்னனிடம் எடுத்துச் சொல்லி, மடம் நன்கு இயங்க ஆவன் செய்கிறார். இவையே அந்தச் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

அதில் வண்ணார் சமூகத்தினர் உண்டான வரலாறும், அவர்கள் முன்னோர்கள் தவம் இயற்றிய பாங்கும் சொல்லப்படுகிறது. அவ்வாறு இருந்த ஒருவர் காசிக்குச் சென்று ரிஷிகளிடத்தில் தீட்சை பெற்று வந்த விவரமும் சொல்லப்பட்டுள்ளது. வண்ணார் சாதி என்று தங்களைச் சொல்லிக் கொள்ளும் அவர்களுக்குப் பல இடங்களிலும் மடங்கள் இருந்திருக்கின்றன, எல்லா மடங்களுக்குமாக ஒரு தலைவர் இருந்திருக்கிறார். அவர் சிதம்பரம் வரும் போது தங்கும் வசதி, உணவு ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்தது பற்றியும் அதில் சொல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே தொழிலைச் செய்தவர்களுக்கிடையே பாரதமெங்கும் தொடர்பு இருந்திருக்கிறது. அவர்களுக்குள் தவ வாழ்க்கை மேற்கொண்ட தாபதர்கள் போன்றவர்கள் இருந்திருக்கிறார்கள்.

0 comments:

Post a Comment